பனாமாவில் 500 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து: 39 அகதிகள் உடல் நசுங்கி பலி!!.

பனாமா : பனாமா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மலை பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அமெரிக்காவை இணைக்கும் நாடாக பனாமா இருப்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் பனாமா மூலமாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் டேரியன் கேப் வனப்பகுதி அருகே பனாமாவிற்குள் நுழைந்த 60க்கும் மேற்பட்ட அகதிகளை Chiriqui மாகாணத்தில் உள்ள முகாமிற்கு பனாமா குடியுரிமை அதிகாரிகள் கொண்டுச் சென்றனர்.

அவர்கள் பயணித்த பேருந்து மலைப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது.அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைச்சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் பாய்ந்தது. பல முறை உருண்ட பேருந்து 500 அடி ஆழத்தில் இருந்த மலைச் சாலையில் மோதியது. இந்த கோர விபத்தில் 39 அகதிகள் உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 20 அகதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்த அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை பனாமா நாட்டு அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும் அவர்கள் வெனிசுலாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

Related Stories: