ஸ்மார்ட் போன் வாங்கி பாதி விலைக்கு விற்பனை செய்யும் கும்பல் இஎம்ஐ கட்டாததால் போனை லாக் செய்யும் நிறுவனங்கள்

சிறப்பு செய்தி:

ஸ்மார்ட் போன் வாங்கி பாதி விலைக்கு விற்பனை செய்து, இஎம்ஐ கட்டாமல் எஸ்கேப் ஆகும் கும்பலால், நிறுவனங்கள் போனை லாக் செய்கிறது. இதனால், ஸ்மார்ட் போனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் ஏமாறுகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் செல்போன் பயன்படுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகரங்களில் இருப்பவர்கள் தொடங்கி, கிராமங்கள் வரை என அனைவரின் கையிலும் தற்போது செல்போன்களை நம்மால் எளிதாக பார்க்க முடிகிறது. அதிலும் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்த பிறகு செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.

மேலும், ஸ்மார்ட் போன்களில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளதால் பொதுமக்கள் பலரும் நகமும், சதையுமாய் ஸ்மார்ட் போன் உடன் இணைந்து உள்ளனர். எந்த தேவையாக இருந்தாலும் ஸ்மார்ட்போன்கள் மூலம் உடனுக்குடன் செய்து கொள்ள முடிகிறது. குறிப்பாக, யாரையாவது தொடர்பு கொள்ள கொண்டு பேசுவதற்கு, புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் பரிமாற்றிக் கொள்வது, குறுந்தகவல்களை எழுத்துக்கள் மூலமாகவும், வாய்ஸ் மெசேஜ் மூலமாகவும், வீடியோ கிளிப்பிங் மூலமாகவும் அனுப்பவது, பண பரிமாற்றம், கட்டணங்களை செலுத்துவது, முக்கிய ஆவணங்கள் அனுப்புவது என அனைத்தும் ஒரு சிறிய ஸ்மார்ட் போன் மூலம் செய்து விட முடிகிறது.

இதனால், குடும்பத்தினரை விட ஒரு நபருக்கு ஸ்மார்ட் போன் மிகவும் முக்கியத்துவமாக உள்ளது. வீட்டில் இருக்கும்போது, சமைக்கும்போது, பணியில் இருக்கும்போது, நடந்து செல்லும்போது, வாகனம் ஓட்டும்போது, பிற ஊர்களுக்கு பயணம் செய்யும்போது, தூங்கும்போது, கழிவறைக்கு செல்லும்போது என எப்போதும் ஸ்மார்ட் போன் உடன் இருக்கின்றனர். பெரும்பாலானோர் தூக்கத்தில் எழுந்து மெசேஜ் ஏதாவது வந்திருக்கிறதா, யாராவது மெசெஜ் அனுப்பி இருக்கிறார்களா என தங்களை அறியாமல் அடிமை ஆகியிருக்கும் நிலைமையில் ஸ்மார்ட் போன்களின் மோகம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது.

இதனை பயன்படுத்திக் கொள்ளும் சம்மந்தப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறு விற்பனைக்கு கொண்டு வருவதில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து தொடங்கி சில லட்சம் ரூபாய் வரை ஸ்மார்ட்போன்களின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது என்றால் அதனை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என பொதுமக்கள் துடியாய் துடிக்கின்றனர். விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களை வாங்கும் அளவிற்கு வசதி இல்லாமல் குறைந்த அளவில் வருமானம் பெற்று வரும் நபர்கள் கூட இஎம்ஐ வசதியுடன் அவர்களுக்கு பிடித்த விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

சிலர் ஆன்லைன் மூலம், செல்போன் வியாபாரிகள் மூலம் ஸ்மார்ட் போன்களை இஎம்ஐ மூலம் வாங்குகின்றனர். பெரும்பாலானோர் செகண்ட் ஹாண்டில் ஸ்மார்ட்போன்களை பாதி விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு இஎம்ஐ மூலம் செல்போன்கள் வாங்கும் நபர்கள் முறையாக இஎம்ஐ கட்டவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் செல்போன் வாங்கியவர்கள் வீட்டிற்கு நடையாய் நடந்து அந்த தொகையை பெற்று வந்தனர். சில சமயங்களில் செல்போன் வாங்கிய நபர்கள் வீடுகளை காலி செய்து ஏதாவது ஒரு ஊருக்கு சென்று விடுவதால் வங்கிகள் சார்பில் இஎம்ஐ தொகையை பெற முடியாமல் இருந்து வந்தது.

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க சில கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் ஆன்லைன் மூலம் இஎம்ஐயில் பொருட்கள் கொடுக்கும் நிறுவனங்கள் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆன்லைனில் இஎம்ஐ மூலம் வாங்கும் ஸ்மார்ட்போன்களின் முழு செயல்பாடுகளையும் அந்நிறுவனம் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும், இஎம்ஐ கட்டவில்லை என்றால் சம்பந்தப்பட்ட செல்போன் தானாக லாக் ஆகிவிடும். பின்னர் எப்போது இஎம்ஐ தொகையை கட்டுகிறார்களோ அப்போது மீண்டும் லாக் ரிலீஸ் ஆகிவிடும். இதே முறையை சில கடன் கொடுக்கும் வங்கி நிறுவனங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன.

இதனால், ஸ்மார்ட் போன் பெற்று இஎம்ஐ கட்ட முடியாமல் யாரும் தப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் யாரும் ஏமாற்றி விட முடியாது என்பதால் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் தகவல்களைப் பெற்றுக் கொண்டு சில நிறுவனங்கள் இஎம்ஐ வசதியுடன் செல்போன்களை விற்பனை செய்கிறது. இதனால், இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஆதார் அட்டையை பயன்படுத்தி இஎம்ஐ மூலம் ஸ்மார்ட் போன்கள் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. வங்கி மற்றும் ஆன்லைன் நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் ஏமாற்றி நூதன முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என ஒரு கும்பல் கிளம்பி உள்ளது.

சமீப காலமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில மர்ம நபர்கள் ஆன்லைன் மூலம், சில தனியார் கடன் கொடுக்கும் வங்கி நிறுவனங்கள் மூலம் ஆதார் அட்டையை பயன்படுத்தி விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு புதிய ஸ்மார்ட்போன்களை பெற்றுக் கொண்ட ஒரு சில மணி நேரங்களில் அவசர உதவிக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி பொதுமக்கள் அல்லது செல்போன் வியாபாரிகளிடம் பாதி விலைக்கு ஸ்மார்ட்போன்களை மர்ம நபர்கள் விற்பனை செய்து, பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அந்த ஸ்மார்ட் போன், செல்போன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது மற்ற செல்போன் வியாபாரிகளுக்கு என மாறி மாறி விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பிறகு சில நாட்களில் இஎம்ஐ கட்டப்படவில்லை என கூறி செல்போன் தன்னால் லாக் ஆகிவிடுகிறது. இந்த லாக்கை இஎம்ஐ கட்டினால் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனம் ரிலீஸ் செய்யும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றப்படுகின்றனர். விற்பனை செய்து நபர் குறித்து புகார் அளித்தாலும் அவர் யார் என்னை என்பது தெரிவதில்லை. இதுபோன்று நூதன முறையில் புதிய கொள்ளை சம்பவம் நடைபெற துவங்கியுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்று செல்போன் வாங்கி விற்பனை செய்வதற்கு முன்பு அந்த செல்போன் இஎம்ஐயில் உள்ளதா, விற்பனை செய்யும் நபர் எந்த பகுதியை சேர்ந்தவர், அவரது அடையாள அட்டை மற்றும் முகவரி உள்ளிட்டவை முறையாக உள்ளதா என முழுமையாக ஆய்வு செய்த பின்னர் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் செல்போன்களையும் பொதுமக்கள் இவ்வாறு ஆய்வு செய்து பெற்றுக் கொண்டால் ஏமாற்றத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.     

* குறைந்த விலையா? உஷார்...

செல்போன் வியாபாரி அன்சாரி என்பவர் கூறுகையில், ‘‘விலை உயர்ந்த புதிய செல்போன்களை அவசர தேவைக்கு என்று பாதி விலையில் சிலர் விற்பனை செய்கின்றனர். புதிய செல்போன் பாதி விலைக்கு கிடைக்கிறதே அதனை பெற்று நாம் சிறிய தொகை மேலே வைத்து விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும் என வியாபாரிகளும், புதிய செல்போன்களை ஆன்லைன் மூலம், செல்போன் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதை விட பாதி விலையில் புதிதாகவே கிடைக்கிறதே என பொதுமக்களும் வாங்கி விடுகின்றனர். ஆனால், சில நாட்களுக்கு பின்னர் அந்த செல்போன் திடீரென லாக் ஆகி இஎம்ஐ கட்டினால் மட்டுமே மீண்டும் அன்லாக் செய்யப்படும் என காட்டுகிறது. அவ்வாறு லாக் ஆகும் செல்போன்களை சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மற்றும் கடன் கொடுக்கும் வங்கிகளால் மட்டுமே அன்லாக் செய்ய முடியும் அதற்கு இஎம்ஐ கட்டியிருக்க வேண்டும். மற்றபடி நம்மால் அந்த செல்போனை பயன்படுத்தவே முடியாது. எனவே, குறைந்த விலையில் செல்போன் விற்கப்பட்டால் பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்,’’ என்றார்.

* கண்டுபிடிப்பதில் சிக்கல்

இதுபோன்ற மோசடிகளில் செல்போன் விற்பனை செய்தவர் மீது புகார் அளிக்கலாம் என்றால் அது ஒரு நபரிடம் இருந்து மற்றொருவர், மற்றொருவர் என மாறி மாறி விற்பனை செய்யப்பட்டிருக்கும். அதனால் யார் முதலில் செல்போன் வாங்கியது என்பதை கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம். இவ்வாறு, ஆதார் அட்டை பயன்படுத்தி இஎம்ஐ மூலம் விலை உயர்ந்த செல்போன் பெற்று விற்பனை செய்து பணம் பெற்று இஎம்ஐ கட்டாமல் ஏமாற்றும் நபர்கள் மீண்டும் அடுத்த முறை ஆதார் அட்டையை பயன்படுத்தி இஎம்ஐயில் செல்போன் வாங்க முடியாது என்பதால் அவர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ள ஒரு, ஒரு நபர்களின் ஆதார் அட்டையை பயன்படுத்தி மீண்டும் விலை உயர்ந்த செல்போன்கள் பெற்று பாதி விலையில் விற்பனை செய்து ஏமாற்றி வருகின்றனர்.

* வடமாநில கும்பல் கைவரிசை

இதுபோன்ற மோசடிகளில் பெரும்பாலும் வட இந்தியாவை சேர்ந்த மர்ம கும்பல் தான் ஈடுபட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும், அதோடு நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பலை காவல்துறை கண்டறிந்து கைது செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* பாதி விலை செல்போன் வாங்குவதை தவிர்க்கலாம்

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இஎம்ஐயில் விலை உயர்ந்த செல்போன் வாங்கி, பிறகு உடனடியாக பொதுமக்கள் மற்றும் செல்போன் வியாபாரிகளிடம் பாதி விலைக்கு விற்பனை செய்து இஎம்ஐ கட்டாமல் ஏமாற்றும் சம்பவம் குறித்து புகார்கள் எதுவும் பதிவாகவில்லை. காரணம், செல்போன் விற்பனை செய்த நபரின் விவரங்கள் குறித்து செல்போன் வாங்கிய நபர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான். அவ்வாறு அடையாளம் தெரிந்தாலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களை தேடிச் சென்று பிடித்தாலும் இஎம்ஐ பணத்தை கொடுக்க முன்வரப்போவதில்லை. எனவே செல்போன் பெற்று பணம் ஏமாந்தது போதும், மீண்டும் எதற்கு சம்பந்தப்பட்ட நபரை தேடி பிடிக்க செலவு செய்ய வேண்டும் என பெரும்பாலானோர் புகார் அளிக்காமல் தவிர்க்கின்றனர்.

பொதுமக்கள் இதுபோன்று ஏமாறாமல் இருக்க பாதி விலையில் செல்போன்கள் வாங்கும் போது அது ஒரிஜினல் தானா, பில் உள்ளதா, பில்லில் செல்போன் பைனான்ஸ் மூலம் பெறப்பட்டுள்ளது என குறிப்பிட்டு இருக்கிறதா, விற்பனை செய்பவரின் முகவரி, ஆதார் அட்டை நகல், புகைப்படம், செல்போன் எண் மற்றும் குடும்பத்தினர் யாராவது ஒருவரின் செல்போன் எண், அவர் என்ன பணி செய்கிறார் என்ற விவரங்களை பெற்ற பின்னரே வாங்க வேண்டும். செல்போன் பைனான்ஸில் இருக்கிறது என பில்லில் குறிப்பிட்டிருந்தால் அதை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. இப்படி நூதன முறையில் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க ஆடம்பரமாக காட்டிக் கொள்வதற்காக விலை உயர்ந்த செல்போன் வாங்குவதை தவிர்த்து விட்டு வருமானத்திற்கு ஏற்றபடி விலை குறைவான செல்போனை ஷோரூம்களில் முறையாக வாங்குவது நல்லது’’ என்றார்.

Related Stories: