ரஞ்சி கோப்பை பைனல் பெங்கால் - சவுராஷ்டிரா பலப்பரீட்சை: கொல்கத்தாவில் இன்று தொடக்கம்

கொல்கத்தா: ரஞ்சி கோப்பை தொடரில், கொல்கத்தாவில் இன்று தொடங்கும் பைனலில் முன்னாள் சாம்பியன்கள் பெங்கால் - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. நடப்பு ரஞ்சி சீசன் (2022-23), கடந்த டிச. 13ம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில், அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசத்தை 306 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்கால் அணியும், கர்நாடகாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சவுராஷ்டிரா அணியும் பைனலுக்கு முன்னேறின. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் அரங்கில் இன்று காலை தொடங்குகிறது. ஏற்கனவே சவுராஷ்டிரா அணி 3 முறையும், பெங்கால் அணி 2 முறையும் ரஞ்சிக் கோப்பையை முத்தமிட்டுள்ளன. பெங்கால் 15வது முறையாகவும், சவுராஷ்டிரா 8வது முறையாகவும் இறுதிப் போட்டியில் களமிறங்குகின்றன.

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட், சவுராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளது அந்த அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வாசவதா, சிராக் ஜானி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பார்மில் உள்ளனர். உனத்கட், சகாரியா, தர்மேந்திர ஜடேஜா, பார்த் பட் ஆகியோர் அடங்கிய பந்துவீச்சு கூட்டணி பெங்கால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயம், உள்ளூரில் பைனலில் விளையாடுவது பெங்கால் அணிக்கு சாதகமாக இருக்கும். கேப்டன் மனோஜ் திவாரி, கராமி, மஜும்தார், அபிஷேக் போரெல் ரன் குவிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். ஆகாஷ் தீப், முகேஷ் குமார், ஷாபாஸ் அகமது, பிரமானிக் ஆகியோர் பந்துவீச்சில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இரு அணிகளுமே  மீண்டும் சாம்பியனாகும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* பெங்கால் அணி வேகப் பந்துவீச்சில் அதிக பலம் வாய்ந்ததாக இருப்பதால், ஈடன் கார்டன் ஆடுகளம் அதற்கு ஒத்துழைக்கும் வகையிலேயே ‘பச்சைப் புல்’ போர்த்தி காணப்படுகிறது.

Related Stories: