போதைப்பொருள் ஒழிப்பை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: ஒரு மாதத்தில் 3,107 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்

* அதிமுக ஆட்சியில் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறந்தது அம்பலம்

* சிவில் சப்ளை சிஐடி வேட்டை ஆரம்பம்

* சிறப்பு செய்தி

போதைப் பொருள் ஒழிப்பை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், ரேசன் பொருட்கள் கடத்தியதாக 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3,107 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போதைப் பொருள் கடத்தல் பெரிய அளவில் நடந்தது. போதைப் பொருளைப் பொருத்தவரை வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்பட்டது. அவை, தமிழகம் வழியாக இலங்கைக்கும் கடத்தப்பட்டது. அப்போதைய, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இதில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்துதான் குட்கா பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக அதிமுக மாஜி அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. முதல்வராக கலைஞர் இருந்தபோது 20 கிலோ(புழுங்கல், பச்சை அரிசி தலா 10 கிலோ) ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அரிசிக்கான பணத்தை தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதற்காகவே பல ஆயிரம் கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு செலவிட்டு வருகிறது.

அதில்,  இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை, அதிமுக ஆட்சியில் பெரும்பாலானவர்கள் வாங்கவில்லை. குறிப்பாக 30 முதல் 40 சதவீதம் பேர் வரை ரேஷன் அரிசியை வாங்குவதில்லை. இந்த ரேஷன் அரிசியை, ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உடந்தையுடன் வாங்கி, அரிசி ஆலைகளில் அதை பாலீஸ் செய்து, அதிக விலைக்கு வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு  வந்தன. தமிழகத்தில் வழங்கப்பட்ட ரேசன் அரிசி பாலீஸ் செய்யப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு, பின்னர் மீண்டும் அந்த அரிசி தமிழகத்திற்கே மீண்டும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டும் வந்தது. அதிமுக ஆட்சியில் குறைந்தது ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரிசி கடத்தல் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கவும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால், மாநிலம் போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றவாளிகளின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில், ரேசன் அரிசி கடத்தலையும் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக, சிவில் சப்ளை சிஐடிக்கு புதிய ஏடிஜிபியாக அருண் ஜனவரி 1ம் தேதி நியமிக்கப்பட்டார். முதல்வர் உத்தரவின்பேரில், டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அருண் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சிவில் சிப்ளை சிஐடி போலீசாரின் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜனவரி 3ம் தேதி ஏடிஜிபி அருண்  தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், ரேசன் அரிசி கடத்தலை முற்றிலும் ஒழிப்பது குறித்து அதிரடி உத்தரவுகள் வழங்கப்பட்டன. சிவில் சப்ளை சிஐடி பிரிவிலேயே தனியாக உளவுப் பிரிவு உருவாக்கப்பட்டு, ரகசிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் தனிப்படை மூலம் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வந்தன.

கடந்த ஜன.1ம் தேதி முதல் 31ம் தேதிவரை இதுவரை இல்லாத அளவில் 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசி கடத்தல் வழக்குகளை பொறுத்தவரை அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை 1000 கிலோவிற்கு மேல் கடத்தினாலோ அல்லது இக்கடத்தலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவ்வழக்குகள் முக்கிய வழக்காக கருதப்படும். 321 அரிசி வழக்குகளில் 3,107 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 90 வழக்குகள் முக்கிய வழக்குகள். இவற்றில் மூன்று ஆயில் கடத்தப்பட்ட வழக்குகள் உட்பட மொத்தம் 93 முக்கிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயில் கடத்தல் வழக்குகளை பொறுத்தவரை சேமிப்பு கிடங்கு வைத்திருத்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், சுத்திகரிப்பு, கலப்படம், உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்வது குற்றம். 12 மண்ணெண்ணெய் வழக்குகளில் 2237 லிட்டர் பொது விநியோகத்திட்ட மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கலப்பட டீசல் 15,000 லிட்டர், 88 சமையல் எரிவாயு வழக்குகளில் 96 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு மாதத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதை தவிர கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்குற்றங்களில் ஈடுபட்ட 456 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 124 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின்(குண்டர் சட்டத்தில்) கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மிக முக்கிய வழக்குகளாக கடந்த 7ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழதுரைகுடி கிராமத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைக்கபட்டிருந்த 3200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதால் குற்றவாளிகள் ஆற்றில் ரேசன் அரிசியை கொட்டியுள்ளனர். அதனை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜன.17ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு டேம் சுருக்கி பாலம் அடியில் ஓடும் தண்ணீரில் 10 அடி ஆழத்தில் 2700 கிலோ அழுகிய நிலையில் இருந்த ரேசன் அரிசியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றர்.

மேலும் திருச்சி மண்ணச்சநல்லூரில் 15,250 கிலோ, காஞ்சிபுரத்தில் 11,440 கிலோ, கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கு கடத்த இருந்த 18,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதை தவிர கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கேரளாவுக்கு லாரியில் கடத்த இருந்த 12,000 கிலோ ரேசன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை இந்த மாதமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து சிவில் சப்ளை ஏடிஜிபி அருண் கூறும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கினங்க, பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தரமான பொருட்கள், மக்களுக்கு  முறையாக சென்றடைய குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கடத்தலையும், பதுக்கலையும் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதிமுக ஆட்சியில் குறைந்தது ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரிசி கடத்தல் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: