மழலையர் பள்ளி கட்டிட அனுமதிக்கு ரூ.42 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது

ஓசூர்: ஓசூரில் மழலையர் பள்ளிக்கு கட்டிட அனுமதி வழங்க ரூ.42 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் மற்றும் துணை தாசில்தாரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை மஞ்சுளா என்பவரிடமிருந்து அரவிந்த் என்பவர் வாங்கி உள்ளார். இந்த பள்ளிக்கு பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாத நிலையில், பள்ளி நிர்வாகி அரவிந்த் தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் புதிதாக அனுமதி பெற விண்ணப்பித்துள்ளார். அதனடிப்படையில் வருவாய்த்துறையிடம் பொது கட்டிட அனுமதிக்கு அரவிந்த் விண்ணப்பித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்யும்படி கூறியுள்ளார். மேலும் பொது கட்டிட அனுமதிக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். பின்னர் பள்ளி நிர்வாகி, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.42 ஆயிரத்தை தாசில்தார் கவாஸ்கர் மற்றும் துணை தாசில்தார் மங்கயர்கரசியிடம் நேற்று பள்ளி நிர்வாகி அரவிந்த் வழங்கினார். அப்போது தாலுகா அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரையும், துணை தாசில்தாரையும் கைது செய்தனர். மேலும், தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். லஞ்சம் வாங்கி தாசில்தார், துணை தாசில்தார் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: