ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிமோனா ஹாலேப் நிச்சயம் மீண்டு வருவார்.! பயிற்சியாளர் டேரன் கேஹில் நம்பிக்கை

லண்டன்:‘தான் குற்றமற்றவர் என்பதை விசாரணையின் போது நிரூபித்து, மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப் பங்கேற்பார்’ என்று அவரது பயிற்சியாளர் டேரன் கேஹில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ருமேனியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சிமோனா ஹாலேப். கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 64 வாரங்கள் வரை சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2018ம் ஆண்டு ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரன்னர் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். 2019ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்.

பின்னர் கடந்த 2022ம் ஆண்டு டபிள்யூடிஏ போட்டியின் போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அனீமியாவால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரைகளை மட்டுமே பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.இருப்பினும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸி.ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணை, இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அவரது பயிற்சியாளர் டேரன் கேஹில் கூறுகையில், ‘‘சிமோனா ஹாலேப் ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை. வெற்றி, தோல்விகள் குறித்து கவலைப்படாமல், மகிழ்ச்சியாக விளையாடும் எண்ணம் உடையவர்.

அனீமியாவுக்காக டாக்டர்கள் பரிந்துரைத்த முறையான மருந்து, மாத்திரைகளை மட்டுமே அவர் உட்கொண்டார். பிரச்னைக்குரிய அந்தப் போட்டியில் அவரது சிறுநீர் பரிசோதனையில், அந்த மருந்து, மாத்திரைகளின் தாக்கம் இருந்திருக்கலாம்.இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள விசாரணையில் தனது நேர்மையை நிரூபித்து, அவர் நிச்சயம் தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வருவார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அவர் பங்கேற்று ஆடுவார்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கிறிஸ் எவர்ட், மார்ட்டினா நவரத்திலோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் சிமோனா ஹாலேப்புக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Stories: