எம்பியை சஸ்பெண்ட் செய்த விவகாரம்; துணை ஜனாதிபதியை ஒற்றை விரலை காட்டி விமர்சித்த ஜெயா பச்சன்: மாநிலங்களவையில் பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பியை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் துணை ஜனாதிபதியை நோக்கி ஒற்றை விரலை காட்டி ஜெயா பச்சன் விமர்சனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 9ம் தேதி காங்கிரஸ் எம்பி ரஜினி படேல் என்பவர் தனது செல்போன் மூலம் அவையின்  நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதயைடுத்து அவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு முன்னாள் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்பியுமான ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது ஏற்பட்ட அமளிக்கு மத்தியில், இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயா பச்சன், மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரின் இருக்கைக்கு முன்னால் சென்றார். பின்னர், அவரை நோக்கி ஒற்றை விரலை காட்டி விமர்சனம் செய்தார். இதனை எதிர்பாராத ஜக்தீப் தன்கர், ஜெயா பச்சனின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பான வீடியோவை, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்  ஆலோசகர் காஞ்சன் குப்தா, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் அஜய் ஷெராவத் வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவை எம்பி ஜெயா பச்சனின் நடத்தை வெட்கக்கேடானது’ என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பலரும் ஜெயா பச்சனின் நடவடிக்கையை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: