திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து கைவரிசை ஒரே நாளில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை: தடயங்களை அழிக்க தீ வைத்து எரிப்பு; வெளிமாநிலங்களுக்கு 6 தனிப்படை விரைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூரில் 4 ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மெஷின் மூலம் ஒரே நாள் இரவில் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10வது தெருவில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று அதிகாலை சிலர் பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் ஷட்டர் மூடியிருந்தது. உள்ளே இருந்து லேசாக புகை வந்தது. அவர்களின் தகவலின்படி திருவண்ணாமலை டவுன் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து, ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.

அதேபோல், திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திலும், இதே பாணியில் ரூ.31 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும், திருவண்ணாமலை- வேலூர் சாலையில், கலசபாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தையும் வெல்டிங் மெஷினால் உடைத்து, ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து, போளூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள ஏடிஎம்மை வெல்டிங் மெஷினால் உடைத்து ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். 4 இடங்களிலும் கொள்ளையடித்த பின், ஏடிஎம் மையத்தில் தீ வைத்து ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுள்ளனர். சிசிடிவி கேமராக்களையும், வெல்டிங் மெஷின் மூலம் தீ வைத்து எரித்துள்ளனர்.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதில், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று காத்திருப்பதும், சிறிது நேரத்தில் அங்கிருந்து செல்வதும் பதிவாகியிருக்கிறது.

அதிகாலை 2 மணிக்கு தொடங்கி, 4.30 மணிக்குள்ளாக இந்த கொள்ளை சம்பவம் அடுத்தடுத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படையினர் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்கள் விரைந்து சென்று முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

* வெளி மாநில கொள்ளையர்கள்-ஐஜி தகவல்

வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளையில் வெளி மாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா, புனே, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதேபோல் ஏடிஎம் கொள்ளை நடந்திருக்கிறது. எனவே, அவர்களுடன் இணைந்து விசாரணையை நகர்த்துவோம். விரைவில், கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

* டிரைவரை தாக்கிவிட்டு காரை கடத்திய கும்பல்கொள்ளையர்களா?

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சஷ்டி முருகன்(27). வாடகை கார் டிரைவர். இவர், நேற்று முன்தினம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். இரவு 11 மணி அளவில் அங்கு இறக்கிவிட்டு, டிரைவர் சஷ்டி முருகன் மட்டும் காரில் திரும்பி கொண்டு இருந்தார். தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு ஏரிக்கரை அருகே சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினார். அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கார் சாவியை பறித்துக் கொண்டு அவரை தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்றனர். டிரைவரை தாக்கி காரை கடத்திய மர்ம நபர்கள், ஏடிஎம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: