மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாகவும் அவர் செயல்படுவார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு சென்னை ஐஐடி இயக்குனராக இருந்த பிரகாஷ் ராமமூர்த்தி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை ஐஐடியின் 11வது இயக்குனரான பேராசிரியர் காமகோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நியமிக்கப்படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஒரு சில பரிந்துரைகளையும், எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

அதன்படி, சிவகாசி, விருதுநகர் வெடி விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தக் கூடாது, கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைப்பதற்கும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது. மழைநீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஆகியவையும் உருவாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு நிபந்தனை விதித்துள்ள நிலையில், மேற்கண்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: