கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

கூடலூர்: கனமழை பெய்தும் போதிய நீர்வரத்தில்லை என்பதால், பெரியாறு அணைக்கு வரும் நீரை, திசை மாற்றுவதாக கேரள அரசு மீது விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை இயல்பை விட மிக குறைவாகவே பெய்தது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இயல்பைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் வரை குறைவாகவே மழை பெய்தது. தற்போது கோடை மழை கடந்த 10 நாட்களில் பெரியாற்றில் 129.8 மி.மீ, தேக்கடியில் 57.6 மி.மீ பெய்துள்ளது. அணைக்கு இந்த பத்து நாட்களில் நீர்வரத்து சராசரியாக 233.5 கனஅடி வந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே 10 நாட்களில் பெரியாற்றில் 30.4 மி.மீ, தேக்கடியில் 66 மி.மீ, என குறைந்த அளவே மழை பெய்துள்ளது. ஆனால் அணைக்கு நீர்வரத்து 10 நாட்களில் சராசரியாக 256.4 கனஅடி வந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 96.4 மி.மீ, மழை பொழிந்தபோது 256.4 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இந்த ஆண்டு 187.4 மி.மீ, மழை பொழிந்தும் நீர்வரத்து 233.5 கனஅடியாக குறைந்துள்ளது. அதனால் பெரியாறு அணைக்கு வரும் நீர் கேரளாவில் திசை மாற்றப்படுவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘கடந்த ஒரு சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஆனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்த அளவே வந்து கொண்டிருக்கிறது. பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது கேரள அரசு. பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை மடை மாற்றுகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறோம். எனவே, தமிழக அரசு பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான 232.80 சதுர மைல் பகுதியை, கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் டிரோன் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

The post கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: