மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் அன்பழகன் - ஜெயந்தி தம்பதி. இவர்களது மகன் ரகுராமன். இவர், கடந்த 2017ம் ஆண்டு பல்லாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, குத்துச்சண்டை பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களை அந்த பள்ளியில் காலை பள்ளியில் நடக்கும் பிரேயரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இதை கண்டு குத்துச்சண்டை போட்டி மீது ரகுராமனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ரகுராமன் பள்ளியில் குத்துச்சண்டை போட்டி பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

இவருக்கு பள்ளியில் குத்துச்சண்டை பயிற்சியாளராக உள்ள விநாயகமூர்த்தி என்பவர் பயிற்சி அளித்துள்ளார். ஆரம்பத்தில், ரகுராமனின் உடல் எடை சுமார் 75 கிலோவுக்கு மேல் இருந்ததால், உடல் எடையை குறைக்க பயிற்சியாளர் பல்வேறு முயற்சிகளை எடுத்து, 8 மாதத்தில் உடல் எடையை குறைத்து குத்துச்சண்டையை முழுமையாக கற்றுக்கொள்ள பயிற்சி அளித்துள்ளார். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட ரகுராமன் முதல் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி உள்ளார். இதுபோன்று பல்வேறு போட்டிகளில் போட்டியிட்டு 33 பதக்கங்கள் இதுவரை ரகுராமன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்ற அசத்திய ரகுராமன் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, அறிஞர் அண்ணா கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்து தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, அதில் ரகுராமன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோல், அறிஞர் அண்ணா கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளியில் 6ம்  வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்து, தற்போது பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் சஞ்சய் என்ற மாணவனும், சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே  பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த  கார்த்திக் என்பவரின் மகன் பாவேஷ் என்ற மாணவனும் அதே போட்டியில் பங்கேற்று  வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் இருவரும் மாநில மற்றும் தேசிய  அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து குத்துச்சண்டை பயிற்சியாளர் விநாயகமூர்த்தி கூறுகையில், ‘‘அறிஞர் அண்ணா கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளியில் தற்போது சுமார் 40 பள்ளி மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறேன். குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற பள்ளி மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்களை போட்டிகளுக்கு தயார்படுத்த அதிக பொருளாதார உதவி தேவைப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஓரளவிற்கு உதவுகின்றனர். அவர்களைத் தவிர கண்டோன்மெண்ட் பள்ளி நிர்வாக அதிகாரி தினேஷ்குமார் ரெட்டி, தலைமை ஆசிரியர் பாஸ்கரன், உடற்கல்வி ஆசிரியர் ரவீந்திரநாத், சமூக ஆர்வலர் பூக்கடை முனுசாமி உள்ளிட்டோர் மாணவர்களின் பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றனர்.

நான் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருப்பது தவிர திருமண நிகழ்ச்சிகளில் டெக்கரேஷன் செய்யும் பணிகளையும் செய்து அதன் மூலம் எனக்கு வரும் வருமானத்தில் என்னால் முடிந்த உதவிகளை அரசு பள்ளி மாணவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் நிகழ்ச்சிகள் இல்லாத போது மாணவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது. எனவே அரசு, பள்ளி மாணவர்களின் திறமைகளை அறிந்து அவர்கள் பல்வேறு போட்டிகளில் சாதனை புரிய உதவி செய்ய வேண்டும்,’’ என்றார்.

* அர்ஜூனா விருது இலக்கு

மாணவன் ரகுராமன் கூறுகையில், ‘‘சிறு வயது முதலே குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டதால், அதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். எனது பெரிய ஆசை இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும். அவ்வாறு தங்கம் வென்றவுடன் அர்ஜூனா விருது பெற வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை. என்னைப் போன்ற மாணவர்களுக்கு அரசு உதவி செய்தால் நிச்சயம் பல்வேறு சாதனைகளை செய்து காட்டுவோம்,’’ என்றார்.

Related Stories: