பிரதமர் பேசி முடித்ததும் வெளியேறிய பாஜ எம்பிக்கள் மக்களவையில் கோரம் இல்லாததை சுட்டிக் காட்டிய தயாநிதி மாறன் எம்.பி.: அவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்து பேசி முடித்ததும் ஒன்றிய அமைச்சர்கள், பாஜ எம்பிக்கள் கூண்டோடு வெளியேறினர். அவையில் கோரம் இல்லாததை தயாநிதி மாறன் எம்.பி சுட்டிக் காட்டினார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். மாலை 4 மணி அளவில் பேசத் தொடங்கிய அவர் சுமார் 85 நிமிடங்கள் உரையாற்றினார். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர அவை நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரதமர் பேசி முடித்து கிளம்பியதும், அவரைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள், பாஜ எம்பிக்கள் கூண்டோடு அவையிலிருந்து வெளியேறி விட்டனர்.

இதனால் அவையை நடத்த போதுமான உறுப்பினர்கள்(கோரம்) இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன், சபாநாயகர் ஓம்பிர்லா கவனத்திற்கு கொண்டு வந்தார். அதாவது நாடாளுமன்ற கூட்டம் நடத்த அவையின் மொத்த எம்பிக்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேராவது இருக்க வேண்டும்.  ஆனால் பிரதமர் மோடி பேசிய முடித்த பிறகு அவையில் வெறும் 5 சதவீத எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். பாஜ தரப்பில் ஒரே ஒரு இணை அமைச்சர் மட்டுமே இருந்துள்ளார்.

இதனால் கோரம் இல்லாததால் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

இது குறித்து பேட்டி அளித்த எம்பி தயாநிதி மாறன், ‘‘நான் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு தெரிந்து, இதுபோல் கோரம் இல்லாததால் அவை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை. இது மிகவும் வருந்தமளிக்கிறது. பட்ஜெட் குறித்த விவாதம் நடக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. அரசு தரப்பில் ஒரு இணை அமைச்சர் மட்டுமே இருந்தார். பிரதமர் பேசி முடித்ததும் பாஜவினர் அனைவரும் சென்றுவிட்டனர். ’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘பிரதமர் மோடி பேசிய முடித்து புறப்பட்டதும், அவரை அண்டிப்பிழைக்கும் சகாக்கள் பின்னாலேயே சென்று விட்டனர். இதனால் கோரம் இல்லாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது’’ என்றார்.

Related Stories: