சவுகார்பேட்டை பகுதியில் கொத்தடிமையாக வேலை செய்த 24 வடமாநில சிறுவர்கள் மீட்பு: சம்பளம் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்த அவலம்

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை பகுதியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 வடமாநில சிறுவர்களை, குழந்தை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். தமிழகத்திற்கு குறைந்த சம்பளத்தில் வேலைக்காக ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் நாளுக்குநாள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், கொத்தடிமைகளாகவும், குழந்தை தொழிலாளர்களாகவும் சட்டவிரோதமாக குழந்தைகள் பணியமர்த்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்தவகையில், சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் தங்க நகை பட்டறை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை என மொத்த விற்பனை கடைகள் அதிகளவு உள்ளன. இங்கு, வேலைக்கு ஆட்களை வைத்தால், அதிக வருமானம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால், கடை உரிமையாளர்கள், தரகர்கள் மூலம்  வடமாநிலத்தில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு சிறுவர்களை அழைத்து வந்து, சிறு சிறு தொழில்களுக்கு பணியமர்த்தப்பட்டு கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சவுகார்பேட்டை பகுதியில் தங்க பட்டறைகள், வெள்ளி பட்டறைகளில் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. இதை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை, காவல்துறை,  சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து அதிரடி  சோதனை மேற்கொண்டனர். அப்போது, 24 சிறுவர்கள் கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், அங்கிருந்து 24 வடமாநில சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர்.

அந்த பகுதியில் உள்ள சமூகநல கூடம் ஒன்றில் மீட்கப்பட்ட சிறுவர்கள் குறித்து நடத்திய விசாரணையில், ₹5 ஆயிரத்தை பெற்றோருக்கு கொடுத்துவிட்டு, சிறுவர்கள் அழைத்துவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மீட்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரித்தபோது, ஓய்வின்றி 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்படுவதும், சம்பளம் ஏதும் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்து வேலை வாங்குவதும் தெரியவந்தது.

இதுகுறித்து, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘‘குழந்தை தொழிலாளர் நலச்சட்டத்தின் அடிப்படையில், 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணி அமர்த்த கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதோடு மட்டுமல்லாது, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆபத்தான தொழிலில் பயன்படுத்த கூடாது என்ற விதிகளையும் மீறி சவுகார்பேட்டை பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல் பயன்படுத்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று, விதிகளை மீறி குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, ₹40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், பெற்றோருக்கு தெரிந்தே 2வது முறை குழந்தைகள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டால், பெற்றோருக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடந்த 6 மாதத்தில் இதேபோன்று நடத்தப்பட்ட சோதனையில் 38 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து சோதனை நடைபெறும்” என்றார்.

Related Stories: