உத்திரமேரூர்: ‘’நான் வந்துட்டேன்’’ என்று குழந்தை பேசியதாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. உத்திரமேரூர் அருகே அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு சில நாட்களுக்கு பிரசவ வலி கடுமையாக ஏற்பட்டதால் அவரை உடனடியாக உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதன்பிறகு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ரேவதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நான் வந்துட்டேன் என்று குழந்தையின் சத்தம் கேட்டதால் ரேவதி திடுக்கிட்டு எழுந்துள்ளார். அப்போதும் குழந்தை நான் வந்துட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பதற்றம் அடைந்த ரேவதி, இதுபற்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து நர்ஸ் உள்பட அனைவரும் வந்து பார்த்தபோதும் குழந்தை நான் வந்துட்டேன் என்று குழந்தை கூறியதாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
இதனிடையே அந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் கிராம மக்கள் திரண்டுவந்து பேசியதாக கூறிய அதிசய குழந்தையை பார்த்து சென்றனர். இதன்காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தற்போது இந்த செய்தி சமூகவலை தள பக்கங்களிலும் வைரலாகி வருகிறது. இவற்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.