சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய அணியுடனா முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்க உள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் இணைந்து இளம் வீரர் ஷுப்மன் கில் இன்னிங்சை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணி பேட்டிங் நடு வரிசையில் களமிறங்கத் தயாராக உள்ளதாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

* தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) சார்பில் 84வது  தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடங்கி பிப். 16 வரை நடைபெறுகிறது. சிறுவர் ( 27 மாநிலம்), சிறுமியருக்கு (19 மாநிலம்) யு-17, யு-19 பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடைபெறும். 1300 பேர் பங்கேற்கின்றனர்.  மொத்தம் 20 மேசைகளில் போட்டி நடைபெறும். இந்தப் போட்டி இன்று முதல் பிப்.16ம் தேதி வரை நடைபெறும். மொத்த பரிசுத்தொகை ரூ.6.6 லட்சம். தொடக்க விழாவில்  விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார்.

* டேபிள் டென்னிஸ் விளையாட்டை பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளையும் இந்த விளையாட்டில் ஈடுபடுத்த உள்ளோம். ஆர்வம் உள்ள அரசுப் பள்ளிகள் எங்கள் சங்கத்தை அணுகினால், அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர்களை ஏற்பாடு  செய்து தருவோம்’ என்று டிஎன்டிஏ செயலாளர்  ஏ.வி.வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

* கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டியின் 3வது இடத்துக்கு தெற்கு ரயில்வே - தென் மத்திய ரயில்வே அணிகள் மோதின. அதில் தெற்கு ரயில்வே 71-69 என்ற புள்ளிக் கணக்கில்  போராடி வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் தெற்கு ரயில்வே அணி 18 முறை  முதல் 3 இடங்களை  கைப்பற்றி அசத்தி  உள்ளது.

* டபுள்யு.பி.எல் டி20 தொடரின் முதல் சீசனுக்கான (மார்ச் 4-26) வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பிப். 13ம் தேதி நடக்க உள்ளது. 5 அணிகளுக்கு, மொத்தம் 409 வீராங்கனைகளில் இருந்து 90 பேர் வாங்கப்பட உள்ளனர். அதிகபட்ச அடிப்படை விலை ரூ.50 லட்சம் பிரிவில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத், துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா உள்பட 24 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

* ஜனவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், தொடக்க வீரர் ஷுப்மன் கில், நியூசி. அணி தொடக்க வீரர் கான்வே ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

* நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி தனது புத்தம் புதிய மொபைல் போன் காணாமல் போய்விட்டதாகவும் அதை யாராவது பார்த்தீர்களா? என்றும் ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* புலவாயோவில் நடக்கும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 447 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், ஜிம்பாப்வே 9 விக்கெட் இழப்புக்கு 379 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 68 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது.

Related Stories: