பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு ஒன்றிய அரசை கண்டித்து 100 நாள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

*சத்தி, பவானிசாகரில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு

சத்தியமங்கலம் : பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைந்த ஒன்றிய அரசை கண்டித்து சத்தி, பவானியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு ஆண்டிலும் குறைக்கப்பட்டு வருவதாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு  உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலத்தில்  ஏஐடியூசி தலைவர் ஸ்டாலின் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், ஏஐடியூசி தொழிற்சங்க தலைவர் சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பவானிசாகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் மகேந்திரன், ஜேசுராஜ், உத்தண்டியூர் ஊராட்சி  தலைவர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாளவாடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாளவாடி ஒன்றிய பொறுப்பாளர் காளசாமி, ஒன்றிய கவுன்சிலர் அருள்சாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: