கூடலூர் அருகே விடுமுறை தினத்தில் துணிகரம் டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபாட்டில்கள் கொள்ளை

கூடலூர் : கூடலூர் அருகே  டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது காளம்புழா. இங்குள்ள டாஸ்மாக் கடை கடந்த 4ம் தேதி இரவு ஊழியர்கள் பூட்டிச்சென்றனர். அடுத்த நாள் (5ம் தேதி) வள்ளலார் தினம் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று வழக்கம்போல் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் கேட் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ள கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பணம் மற்றும் 20 மதுபாட்டில்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து வருகிறார்கள். விடுமுறை தினத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும் கொள்ளையர்களை அவர்கள் தேடி வருகிறார்கள்.

Related Stories: