புரசைவாக்கத்தில் அதிகாலை அடுத்தடுத்த 2 கடைகளில் துணி, பணம் கொள்ளை

சென்னை: சென்னை புரசைவாக்கம் கந்தப்பா தெரு சந்திப்பு பகுதியில், அதே பகுதியை சேர்ந்த கணேஷ் (41) துணிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் கணேஷ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பிறகு நேற்று காலை, கடையை திறக்க கணேஷ் வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,500 ரொக்கம், கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் அனைத்தும் மாயமாகி இருந்தது.

அதேபோல், கணேஷ் துணிக்கடையின் அருகே சிவக்குமார் (50) என்பவரின் பெட்டிக்கடையும் உடைக்கப்பட்டு, அதில் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் துணிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் கணேஷ் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேப்பேரி குற்றப்பிரிவு எஸ்ஐ சம்பத்குமார் நேரில் சென்று அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பார்த்த போது, மர்ம கும்பல் ஒன்று அதிகாலை நேரத்தில் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 2 கொள்ளை சம்பவம் குறித்து தனித்தனியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: