திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய கட்டிடத்தில் காணிக்கை எண்ணும் பணி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் ரூ23 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரக்காமணி கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தினமும் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு ஆண்டுக்கு சுமார் ரூ1,300 கோடிக்கு மேல் காணிக்கை கிடைக்கிறது. கோயிலுக்கு பின்புறம் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் (பரக்காமணி) உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வந்தது.

ஆனால், இங்கு இடவசதி குறைவு காரணமாக தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடம் எதிரே ரூ23 கோடியில் புதிதாக காணிக்கை எண்ணும் கட்டிடம் (பரக்காமணி) கட்டப்பட்டது. இதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் சிசிடிவி கேமரா, நாணயங்கள் எண்ணும் இயந்திரம், ரூபாய் நோட்டுகள் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 12 காணிக்கை உண்டியல்கள் லாரியில்  கொண்டு வரப்பட்டது.

பின்னர் சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 225 ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதனால், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  விரைவாக முடியும். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகளை பக்தர்கள் காணும் விதமாக எல் வடிவில் கண்ணாடி பேழை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ4.30 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 78,340 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27,063 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ4.30 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 10 அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: