ஒன்றரை வருட காத்திருப்புக்கு பின் டெஸ்ட்டில் அறிமுகமாகும் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் களம் இறங்குகிறார்

நாக்பூர்: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. டாப் 2 அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரை இந்தியா கைப்பற்றினால் தான், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும். முதல் டெஸ்ட்டிற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக நாக்பூரில் மற்றொரு ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்ட இந்திய அணியினர் இன்று காலை நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இடம்பிடிக்கப்போவது யார், யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட்டில் சூப்பர் பார்மில் இருந்தார். இக்கட்டான நேரத்தில் அதிரடியாக ஆடி பல போட்டிகளில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் அவர் இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது. எனவே டெஸ்ட்டில் அவரின்இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியில் விக்கெட் கீப்பர்களாக இஷான்கிஷன், கே.எஸ்.பரத் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கே.எல்.ராகுலும், டி.20 போட்டிகளில் இஷான்கிஷனும் விக்கெட் கீப்பர்களாக செயல்பட்டனர். ஆனால் டெஸ்ட் தொடரில் கீப்பிங்கில் திறமையான வீரர் தேவை. ஒருகேட்ச் அல்லது ஸ்டெம்பிங்கை தவறவிட்டாலும் அது வெற்றியை பாதிக்கக்கூடும். எனவே கே.எஸ்.பரத் ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. கே.எஸ்.பரத் மாற்று கீப்பராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் உள்ளார். ஆனால் அவருக்கு ஒரு டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆந்திராவைச் சேர்ந்த 29 வயது வலது கை பேட்ஸ்மேனான அவர், இதுவரை 86 முதல்தர போட்டிகளில் ஆடி 9 சதம், 27 அரை சதத்துடன் 4707 ரன் குவித்துள்ளார். சராசரியாக 37.95 ரன் அடித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட கே.எஸ்.பரத், விருத்திமான்சாகாவுக்கு மாற்றாக இருந்தார். அதன்பின்னர் ரிஷப் பன்ட் சகாவின் இடத்தை பிடித்த நிலையில் கே.எஸ்.பரத் தொடர்ந்து மாற்று வீரராக நீடித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அறிமுகத்திற்காக காத்திருந்த அவர் ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் களம் இறங்க உள்ளார்.

இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் கே.எல்.ராகுலுக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. டெஸ்ட்டில் விக்கெட் கீப்பிங் செய்வது அவருக்கு உகந்தது அல்ல. டெஸ்ட்டிற்கு சிறப்பு கீப்பர் தேவை. பரத் மற்றும் இஷான் ஆகிய இருவர் அணியில் உள்ளனர். யாரை தேர்வு செய்வது என்பது அணி நிர்வாகத்தின் கையில் உள்ளது. இஷான் கிஷனின் சமீபத்திய செயல்பாடு சிறப்பாக இல்லை. எனவே கே.எஸ்.பரத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்றார்.

Related Stories: