மாதந்தோறும் மின் கட்டணம் திட்டம் விரைவில் நிறைவேற்றம்: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

ஈரோடு: மாதம்தோறும் மின்கட்டணம் செலுத்தும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: முதல்வர் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி தந்துள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் நிறைவேற்றப்படும். மின் கணக்கீட்டு பணியாளர்களில் 50 சதவீதம் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் போடுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியுள்ளோம். இதனால், கணக்கீட்டாளர்களுக்கு மாற்று பணி வழங்கப்படுமா என கேள்வி எழும். இரண்டில் எது முக்கியம் என கருதி, விரைவில் நிச்சயமாக மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் திட்டம் முதல்வர் வழிகாட்டுதலின்படி நடைமுறைப்படுத்தப்படும். விசைத்தறிகளை பொறுத்தவரை 750 யூனிட் முதல் 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: