‘இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் அண்ணனை போட்றலாம்’ கொலையாளிகளுக்கு ரூட்டு போட்டுக்கொடுத்து வரவழைத்த மாஜி ஊர்க்காவல்படை வீரர் கைது

சென்னை: இப்ப வந்தா… அண்ணனை போடலாம் என்று ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூட்டு போட்டுக் கொடுத்து, கொலையாளிகளை வரவழைத்த முன்னாள் ஊர்க்காவல்படை வீரரை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டார்‌.

இவர் சம்பவ செந்திலுடன் தொடர்பிலிருந்து கொலையாளிகளுடன் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டவர்.இந்நிலையில், 3 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று முன்தினம் பொன்னை பாலு, ராமு, அருள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கொலையாளிகளை ஒன்றிணைத்தது மற்றும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர். இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இன்று 5வது நாளாக அவரிடம் தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை விசாரணை முடிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும்படியான நான்கு நபர்களை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதில், நேற்று பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த பிரதீப் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. இவரின் தந்தை காவல்துறையில் ஆயுதப்படை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பிரதீப் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு இவர் வேலையில் இருந்து வெளியே வந்து விட்டார்.

ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதி சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருமலை, அருள், பொன்னை பாலு ஆகிய மூன்று பேருடன் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் பிரதீப் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக, அருள் தனியாக ஒரு செல்போனை வாங்கி பிரதீப்பிற்கு கொடுத்துள்ளார். அந்த செல்போனில் மட்டும் அருள், பொன்னை பாலு, திருமலை ஆகியோருடன் பிரதீப் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மற்றவர்களிடம் பேசும் போது தனது வழக்கமான செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக தனித்தனி செல்போன்களை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் வீடு அருகே பிரதீப் வந்து பார்த்தபோது ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது அண்ணன் என மிகவும் குறைவான ஆட்களே இருந்துள்ளனர். எப்போதும் ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தை சுற்றி குறைந்தது 10 பேராவது இருப்பார்கள். ஆனால் தற்போது பெரம்பூரில் அவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டுவதால் அதிக அளவில் ஆட்கள் இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட கும்பல் சரியான முறையில் ரூட் எடுத்து இந்த கொலையை அரங்கேற்றி உள்ளனர். இதன் மூலம் சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் மிக குறைவாக உள்ளனர் என முதலில் பிரதீப் தனது தனிப்பட்ட செல்போன் மூலம் வழக்கறிஞர் அருளுக்கு போன் செய்து கூறியுள்ளார்.

அதன்பிறகு அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற நபர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றி உள்ளனர். இவர்களுக்கு ரூட் ேபாட்டுக் கொடுத்துவிட்டு பிரதீப் அங்கிருந்து சென்று விட்டார். தற்போது போலீசார் இரண்டாவது முறையாக அருளை காவலில் எடுத்து விசாரித்த போது இந்த தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று பிரதீப் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் சில நபர்களை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் 18வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ‘இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் அண்ணனை போட்றலாம்’ கொலையாளிகளுக்கு ரூட்டு போட்டுக்கொடுத்து வரவழைத்த மாஜி ஊர்க்காவல்படை வீரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: