சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை எப்படி பதிவிட்டார்கள் என்று ஐகோர்ட் பதிவுத்துறை விளக்கம் தருமாறும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி, ராஜலட்சுமி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்று மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? என்று கேட்டார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இந்த மனுவை எப்படி பதிவுதுறையில் பதிவு செய்தார்கள் என்று உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து பதிவுத்துறை விளக்கம் தர வேண்டும். திருத்த மனுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்று எப்படி மனு தாக்கல் செய்யலாம்? எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.