விசாகப்பட்டினத்தில் பரபரப்பு வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கற்கள் வீசி கண்ணாடி உடைப்பு

திருமலை: தெலுங்கு மாநிலங்கள் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு கம்மம் ரயில் நிலையத்தை நெருங்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து ரயில் விசாகப்பட்டினம் வந்தடைந்தது. அங்கு உடைந்த கண்ணாடிகள் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 5:45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.52 மணிக்கு புறப்பட்டது.

இதற்கிடையில் ரயில் மீது கற்கள் வீசியவர்களை பெட்டியில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகள் மூலம் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் பிரதமர் மோடி பொங்கல் அன்று இந்த வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருந்த நிலையில், 13ம் தேதி சோதனை ஓட்டத்தின் போதும் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்கியதில் இரண்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. இதில் ரயிலில் பொருத்தப்பட்ட கேமிரா காட்சிகள் ஆதாரமாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: