அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி ஆசாமியை தேடும் உ.பி போலீஸ்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டெல்லி ஆசாமியை உத்தரபிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் பகுதில் ராம்லீலா ஹவுஸ் உள்ளது. இங்கு மனோஜ் குமார் என்பவர் வசித்து வந்தார். தற்போது இவர் பிரயாக்ராஜில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘டெல்லியில் இருந்து பேசுகிறேன். அடுத்த ஐந்து மணி நேரத்தில் (நேற்று முன்தினம் காலை 10 மணிக்குள்), ராம ஜென்மபூமி கோயில் மீது குண்டு வீசப்படும்’ என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த மனோஜ் குமார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

அதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ராமர் கோயிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காணும் வகையில், உத்தரபிரதேச தனிப்படை போலீசார் டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து அயோத்தி நகர எஸ்பி மதுவன் சிங் கூறுகையில், ‘அயோத்தி ராமஜென்மபூமி காவல் நிலைய போலீசார், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகிறோம். கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் சோதனையில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது’ என்றார்.

Related Stories: