2வது நாளில் 10 பேர் வேட்பு மனு காங்கிரஸ், இபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி முகமது அனிபா, திருச்சுழியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி மாநில தலைவர் காந்தி, சென்னை விருகம்பாக்கம் இசக்கிமுத்து, உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் குப்புசாமி, முகமது இலியாஸ், மண்ணின் மைந்தர்கள் கழகம் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தேசிய மக்கள் கழகம் விஜயகுமாரி, தங்கவேல் ஆகிய 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று (வெள்ளி) திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக இபிஎஸ்  அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சி வாக்குவாதம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கரும்புகளுடன் பேரணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். விதி மிறீ 200 மீட்டருக்குள் பேரணியாக வந்ததால் டிஎஸ்பி பவித்ரா தடுத்தார். அதை ஏற்க மறுத்த நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

* மாப்ள இவருதான்.. ஆனா சட்டை?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ தென்னரசு மாஜி அமைச்சர்களுடன் சென்று தொகுதியில் ஆதரவு கோரி வருகிறார். இதேபோல ஒபிஎஸ் அறிவித்துள்ள வேட்பாளர் செந்தில் முருகனும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகிறார். ஆனால் அவர்கள் தங்களது சின்னம் என்னவென்று வாக்காளர்களிடம் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். நிர்வாகிகளும், தொண்டர்களும், ‘‘வேட்பாளர் இவருதான்... ஆனா சின்னம்தான்...’’ என ‘படையப்பா’ செந்திலாக மாறி வேட்பாளர்களுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் ‘‘நாங்க எந்த சின்னத்திற்கு வாக்களிக்கனும்...’’ என்று வாக்காளர்கள் கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு 2 அணியினரும், ‘சின்னம்தான் சிக்கல். இரண்டு நாளில் சொல்லிடுறோம்’ என்று கூறிவிட்டு நைசாக நழுவி செல்கின்றனர்.

* வேட்பாளர் தேர்வில் அதிருப்தி ஓபிஎஸ் அணியில் குஸ்தி

ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்துள்ளது. இது ஓபிஎஸ் அணி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் செந்தில் முருகனின் சமூகத்தினர் அதிகமாக இருப்பதால் மட்டுமே அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும், மாவட்ட நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் நிர்வாகிகளின் அதிருப்தி குறித்து தலைமைக்கு தெரியப்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: