கிழக்கு கடற்கரை சாலையில் டிஎஸ்பி மகன் போதையில் ஓட்டிய கார் மோதி டீக்கடைக்காரர் பலி

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில், டிஎஸ்பி மகன் போதையில் ஓட்டிய கார் மோதியதில் டீக்கடைக்காரர் பரிதாபமாக பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த, விபத்தை ஏற்படுத்திய டிஎஸ்பி மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதன் (30). இவர், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் கடையை மூடிவிட்டு, சாலையோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, சென்னையிலிருந்து அதிவேகத்தில் மாமல்லபுரம் நோக்கி சென்ற கார், மதன் மற்றும் நீலாங்கரை பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு சாலையோரம் கொடி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் (50) ஆகியோர் மீது அதிவேகமாக மோதியது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள்,  பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அடையாறு போக்குவரத்து புலனாய்வு சப்.இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை காவலர்கள் சீனிவாசன், சதீஷ்குமார், காவலர் ரமேஷ் ஆகியோர் சம்பவத்திற்கு விரைந்து வந்து மதன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மதுபோதையில் கார் ஓட்டி வந்த, வேலூர் மாவட்ட காவல்துறை டிஎஸ்பி தங்கவேலுவின் மகன் அன்பரசு (25), அவரது நண்பர்கள் நரேஷ்வரன் (27), ஆனந்த் (27), ஹிட்லர் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: