தாம்பரம்-செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

சிவகாசி: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த பகல் நேர பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை பயணிகள் ரயில் வாரத்திற்கு 5 நாட்கள் விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு சிவகாசி வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.48 மணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். அதே போல் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்பும் வழியாக இரவு 10.30 மணிக்கு தாம்பரம் சென்றடைந்தது.

இந்த ரயில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டதால் பயணிகளிடம் பெரிதும் வரவேற்பை பெற்றது. தாம்பரம்-செங்கோட்டை ரயிலில் 7 பொதுப்பெட்டி, பெண்களுக்கு தனியாக ஒரு பெட்டி, 8 முன்பதிவு பெட்டிகள் இணைக்க பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் தென்காசி, செங்கோட்டை பகுதி பயணிகள் நீண்ட நாட்களாக பகல் நேர ரயில் சென்னைக்கு இயக்க ரயில்வே துறையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் நிறுத்தப்பட்ட இந்த ரயில் இதுவரை இயக்கப்படவில்லை.

எனவே தாம்பரம்-செங்கோட்டை பயணிகள் ரயிலை விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, காரைகுடி, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சிவகாசி வழியா புதிய வழித்தடத்தில் செங்கோட்டை வரை பகல் நேரத்தில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது செங்கோட்டை-சென்னை வழிதடத்தில் பகல் நேர ரயில்கள் எதுவும் இயக்க படாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தாம்பரம்-செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் புதிய வழித்தடத்தில் இயக்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: