போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு

மயிலாடுதுறை: போலீஸ்காரரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆள் மாறாட்டம் செய்த 2 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன்சந்திரம் போலீஸ் சரகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 5ம்தேதி காரில் சாராயம் கடத்தி சென்றவர்களை நாகப்பட்டினம் போலீசார், கார் மற்றும் பைக்கில் விரட்டி சென்றனர்.

அப்போது ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் சரகம் கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் சென்றபோது சாராயம் கடத்தி சென்ற காரை போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரன் (45) பைக்கில் சென்று மறித்தார். காரை ஓட்டிய மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (54) என்பவர் காரை நிறுத்தாமல் ரவிச்சந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பி சென்றார். இதில் ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன்(54), சங்கர்(44), ராமமூர்த்தி(44), புளியம்பேட்டை கருணாகரன்(54) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் 4 பேரும் சரணடைந்தனர். அப்போது கலைசெல்வனுக்கு பதிலாக செல்வம் என்பவரும், கருணாகரனுக்கு பதிலாக செல்வகுமார் என்பவரும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வகுமார், செல்வம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்றநிலையில் நேற்று நீதிபதி விஜயகுமாரி குற்றம்சாட்டப்பட்ட கலைச்செல்வன், கருணாகரன், சங்கர், ராமமூர்த்தி ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் வித்தார். மேலும் ஆள் மாறாட்டம் செய்த செல்வம், செல்வகுமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

 

The post போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை 2 பேருக்கு 7 ஆண்டு சிறை: மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: