ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவர் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தினாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டார்.

வித்தியாசமான முறையில் வாக்கு கேட்டதும், அவரது பிரசார பேச்சும் வேலூர் தொகுதியில் தேர்தல் களத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அவரது திடீர் வருகை காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி: போற்றுதலுக்குரிய பதவியில் இருக்கிற பிரதமர் மோடி விஷப்பாம்மை விட மோசமாக விஷம் கக்குகிற அளவுக்கு தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறை ஓட வைத்து, எப்படி மணிப்பூரில், குஜராத்தில் பண்ணினாரோ அப்படி ஒரு கேவலமான முறையில் நடந்து கொள்கிறார். பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் கால் தூசிக்கு கூட ஈடாக மாட்டார். எனவே, அவர் மனிதனாகவே இருக்கவே தகுதியற்றவர்.

அவரை உடனடியாக இந்திய தண்டனை சட்டத்தின் படி கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும். அவரை சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விலகி விட்டேன். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவதற்காக கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால் போய்ச் சேரவில்லை போல. அதனால் தான் தனியாக கட்சி தொடங்கினேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன்.

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி என்ற மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். எனது ‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியை காங்கிரசுடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘‘தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது என்பதால், தேர்தல் முடிவுக்கு பிறகு மன்சூர் அலிகான் கொடுத்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும்.’’ என்றார்.

The post ஜனநாயகப்புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம்: செல்வப்பெருந்தகையுடன் நேரில் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: