ஏட்டு மனைவியுடன் தவறான உறவு இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை: 8 பேர் கைது

மதுரை: மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கூலிப்படையை ஏவி கொலை செய்த ஏட்டு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல துணைச் செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு கிளம்பியவரை மர்மக் கும்பல்வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மணிகண்டனின் நகைக்கடைக்கு சில மாதங்களுக்கு முன், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபு மனைவியுடன் சென்று மோதிரம் வாங்கி உள்ளார். அதன் பின்னர் ஏட்டுவின் மனைவி, நகைகள் வாங்க சென்றுள்ளார். அப்போது மணிகண்டனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரை தனது வீட்டிற்கே அழைத்திருக்கிறார். அதன்படி, ஏட்டு வீட்டுக்கு அடிக்கடி சென்று அவரது மனைவியுடன் தவறான உறவில் இருந்து உள்ளார். ஒரு நாள் மனைவியுடன் தனிமையில் இருந்ததை பார்த்த ஏட்டு ஆத்திரமடைந்து கூலிப்படையை ஏவி மணிகண்டனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது’’ என்றனர். இதையடுத்து ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: