கடையம் அருகே பெத்தான்பிள்ளைகுடியிருப்பில் பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை-மணிமுத்தாறில் ஜாலி உலா சென்ற யானை கூட்டம்

கடையம் :  கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பில் புகுந்த ஒற்றை யானை நெல், வாழை, தென்னை, வேலியை சேதபடுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் ஒற்றைக்காட்டு யானை புகுந்தது.

 தொடர்ந்து மனோஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்களையும், கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான வாழைகளையும், சங்கர் என்பவரது நெல் பயிரையும் சேதப்படுத்தியது. மேலும் அங்கு மெயின்ரோட்டில் உள்ள மேத்யூ என்பவரது வீட்டு வேலியை சேதப்படுத்தியது. தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து சிவசைலம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கரபாண்டியன், சிவசைலம் விஏஓ செல்வகணேஷ், தலையாரி ஏனோஸ் ஆகியோர் சேதமான பயிர்களை பார்வையிட்டனர்.

வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க சோலார் மின்வேலியை பராமரிக்க வேண்டும், அகழியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம்  மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு மலைப்பகுதியில் யானை,  சிறுத்தை, கரடி, காட்டுப் பன்றி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள்  உள்ளன. இவ்விலங்குகள் அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் புகுந்து  விவசாய பயிர்களை நாசம் செய்வதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருவது  வழக்கம்.

இந்நிலையில் மணிமுத்தாறு அருவி மற்றும் ஏழைகளின் ஊட்டி  என்றழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா  பகுதிகளுக்கு செல்லும் மணிமுத்தாறு வனச்சோதனை சாவடி அருகே நேற்று சாலையில்  குட்டியுடன் யானைகள் நடந்து சென்றன. இதில் இரு யானைகள் ஜோடியாக சென்றதை  அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் வந்து  செல்லும் இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்துறை  அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை  விடுத்தனர்.

விடுபட்ட பகுதியில் சோலார் மின்வேலி

கடந்த ஆகஸ்ட் மாதம் தென்காசி கலெக்டர் ஆகாஷ் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க விடுபட்ட பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க ரூ.10லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை சோலார் மின்வேலி அமைக்கப்பட வில்லை. எனவே, விடுபட்ட பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: