மோடிக்கு யார் அதிக விசுவாசம்? கவர்னர்களிடையே போட்டி: காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு அதிக விசுவாசம் காட்டுவது யார் என்பதில் கவர்னர்களிடையே போட்டி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதுபற்றி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிற எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதிக பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்பும். தற்போது பா.ஜ அல்லாத மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை.

நாங்களும் ஒன்றிய அரசில் இருந்த போது, பல மாநிலங்களில் எதிர்க்கட்சியாக இருந்தோம். ஆனால் முந்தைய கவர்னர்கள் மாநிலங்களை இப்படி நடத்தவில்லை. இப்போதுதான் மோடிக்கு யார் அதிக விசுவாசமாக இருப்பார்கள் என்பதை காட்டுவதில் கவர்னர்களிடையே போட்டி நிலவுவதை நாங்கள் காண்கிறோம். பொருளாதார ஆய்வறிக்கையிலோ, பட்ஜெட் உரையிலோ எதைச் சொன்னாலும், அதைச் சாதிக்கத் தவறிவிட்டனர். எனவே, இது அனைத்தும் பொய். உங்கள் ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்க வேண்டும். அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை விட 50 மடங்கு சம்பாதிக்கலாம். ஆனால் ஏழைகள் இன்னும் ஏழ்மையில் வாட போகிறார்கள் என்பது மட்டும்  நடக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: