அனல் பறக்கும் அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி, பிபிசி ஆவணப்பட விவகாரம் போன்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒன்றிய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

அதைத் தொடர்ந்து, 2023-24ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய பாஜ அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டாக இது இருக்கும். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார். முதல் கட்ட பட்ஜெட் தொடர் வரும் பிப்ரவரி 13ம் தேதியுடன் நிறைவடையும்.

பின்னர், 2ம் கட்ட பட்ஜெட் தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூக நடத்த ஆதரவு கோரி ஒன்றிய அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், திமுக சார்பில் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ், பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, ஆர்ஜேடி, ஜேடியு, சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர், காஷ்மீரில் ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க சென்றதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதில், பட்ஜெட் கூட்டத் தொடரில், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விவாதிக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், மாநில நிர்வாகத்தில் ஆளுநர்கள் குறுக்கிடுவது குறித்தும், நாட்டின் பொருளாதார நிலை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘’27 கட்சிகளில் இருந்து 37 தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். பட்ஜெட் தொடரை சுமூக நடத்த அவர்களின் ஆதரவை கேட்டோம். அவையில் எந்த விவகாரத்தையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’’ என்றார். பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கேன்டீனில் சுவையான சிறுதானிய உணவுகள்

இந்தியா முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘சர்வதேச சிறுதானிய ஆண்டாக’ ஐநா அறிவித்துள்ளது. இதையொட்டி, சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கேன்டீனிலும் முதல் முறையாக விதவிதமான சிறுதானிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஓட்ஸ் பால், சோயா பால், ராஜஸ்தானின் கம்பு சூப், ராகி பட்டாணி சூப், குஜராத்தின் கம்பு வெங்காயம் முத்தியா, சாம்பாருடன் ராகி ரவா இட்லி, மபியின் கம்பு டிக்கி, குஜராத்தின் சோளம் உப்பு, கேரளாவின் ராகி தோசை மற்றும் நிலக்கடலை சட்னி, ராஜஸ்தானின் அரைக்கீரை பூரி, உருளைக்கிழங்கு சப்ஜி, குஜராத்தின் ராகி ரொட்டி, கம்பு கிச்சடி போன்றவை உணவு மெனுவில் இடம் பெற்றுள்ளன.

* பிரதமர் விளக்கமளிக்க திமுக வலியுறுத்தல்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ‘‘பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து விவாதித்து உடனடி தீர்வு காண வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்க இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

சிறுபான்மையினர்க்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதி உதவியை வழங்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்த வேண்டும். குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி ஆவணப்படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, பெண்கள் இட ஒதுக்கீடு, ஜாதிவாரிய கணக்கெடுப்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் இவை அனைத்தும் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு உரிய நேரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து   பரிசீலனை செய்வதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

* அதிமுகவுக்கு தொடர்பில்லாத ஓ.பி.ரவீந்திரநாத் கலந்து கொண்டது எனக்கு தெரியாது: தம்பிதுரை பேட்டி

டெல்லியில் அதிமுக எம்பி தம்பிதுரை அளித்த பேட்டியில், ‘‘அதிமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் தமிழ்நாட்டின்  பிரச்னைகள் குறித்து குரல் கொடுப்போம். மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். ராஜீவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு 33சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் குழுவில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இடம்பெற வேண்டும்.

கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் கொண்டு வர வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  அதிமுகவுக்கு தொடர்பில்லாத ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எந்த அடிப்படையில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது எனக்கு தெரியாது’’ என்றார்.

Related Stories: