ஒன்றிய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பை மாற்ற வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கொல்கத்தா: ஒன்றிய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பை மாற்ற வேண்டும் என்று முன்னாள் நிதிய மைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். ஒன்றிய அரசின் கடைசி முழுபட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுபற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: 2024 பொதுத் தேர்தலுக்கு முன் மோடி அரசின் கடைசி பட்ஜெட் குறித்து எனக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த அரசின் முந்தைய வரவு செலவுத் திட்டங்களின் கடந்த கால அனுபவத்தின் மூலம் பார்த்தால் பெரும் ஏமாற்றம் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு உடனடி நிவாரணமாக கைகளில் அதிக பணப்புழக்கத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல், உரம், மின்சாரத்திற்கு அதிக கட்டணம், வரிவிதிப்பதை குறைக்க வேண்டும். அதே சமயம் பணவீக்கத்திற்கான வருமான வரி விகிதங்களை சரிசெய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போதைய வருமானவரி வரம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. தற்போது அவை பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட வேண்டும். பணவீக்கத்திற்கு ஏற்ப, அடிப்படை விலக்கு வரம்பும் தானாகவே உயர்த்தப்படும். வருமான வரியில் தற்போதுள்ள 10, 20 மற்றும் 30 சதவீத வரி அடுக்குகளை அரசு மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ‘மாற்று வரி விலக்கு இல்லாத வரி முறையை மாற்ற முயற்சி செய்யலாம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: