திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்றார் ஆட்சியர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளுக்கு பின் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தென் முடியனூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 80 ஆண்டுகளாக கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்பது தென் முடியனூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இந்நிலையில், முத்துமாரியம்மன் கோயிலலுக்குள் செல்ல  பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு என புகார் எழுந்தது. புகாரை அடுத்து திருவண்ணாமலை ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்போடு ஆலயத்தில் நுழைய ஏற்பாடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500-க்கும் ஏற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர் மக்களுடன் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் ஆட்சியர் முருகேஷ் தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை அழைத்துச் சென்றார்.  அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. மேலும், கோயில்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  

Related Stories: