ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றி நடைபயணத்தை நிறைவு செய்தார் ராகுல்: 144 நாளில் 4 ஆயிரம் கி.மீ தூரம் நடந்தார், இன்று நிறைவு விழாவில் திமுக உட்பட 12 கட்சிகள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகரின் லால்சவுக் மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, தனது 4 ஆயிரம் கி.மீ தூர இந்திய ஒற்றுமை யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இன்று நடக்கும் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் திமுக உட்பட 12 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், கட்சி தொண்டர்கள் இடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் யாத்திரையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த யாத்திரை பல மாநிலங்களை கடந்து நிறைவாக காஷ்மீரை எட்டியது. யாத்திரையின் 144வது மற்றும், நடைபயணத்தின் நிறைவு நாளான நேற்று பன்தா சவுக் பகுதியில் ராகுல் தனது நடைபயணத்தை தொடங்கினார். ஏராளமான கட்சித் தொண்டர்களுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். சோனாவர் பகுதியில் 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்த ராகுல் அங்கிருந்து மவுலானா ஆசாத் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீநகரின் பிரசித்தி பெற்ற லால் சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டிற்கு சென்று, தேசியக் கொடி ஏற்றி வைத்து, நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

ராகுல் தேசியக் கொடி ஏற்றுவதையொட்டி, லால்சவுக்கில் பிரதமர் வருகைக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவில் இருந்தே லால் சவுக்கில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு சீலிடப்பட்டிருந்தது. மணிக்கூண்டை ஒட்டிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு காரணங்களால் 10 நிமிடத்தில் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து சுமார் 4,000 கிமீ நடைபயணம் மேற்கொண்ட ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஸ்ரீநகரின் எஸ்கே ஸ்டேடியத்தில் யாத்திரை நிறைவு விழா இன்று நடக்க உள்ளது. இதில், 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கேரள காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆகிய 12 எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு காரணத்தால் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை.

* வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது

லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றி வைத்தது குறித்து ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வி அடையும், அன்பு எப்போதும் வெல்லும். இந்தியாவில் நம்பிக்கைகளின் புதிய விடியல் பிறந்தது’’ என்றார். லால் சவுக் பகுதியில் முதலில் ராகுல் தேசியக் கொடி ஏற்ற ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. நேற்று முன்தினம் மாலைதான் அனுமதி கிடைத்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். லால் சவுக்கில் கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு 2022ல் தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்

இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவாக ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல், ‘‘இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பயணத்தில் இந்திய மக்களின் வலிமையையும், மீண்டு வரும் திறனையும் நாங்கள் கண்டோம். விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள், இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் குறித்த பிரச்னைகளை கேட்டறிந்தோம். இந்த யாத்திரை நிச்சயம் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. இந்த யாத்திரை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சென்றதாக இருந்தாலும் இது நாடு முழுவதும் நல்ல தாக்கத்தை தரக் கூடியது. எதிர்க்கட்சிகள் இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜவுக்கு எதிராக அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பாஜவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்’’ என்றார்.

காஷ்மீருக்கு அமித்ஷா நடந்து வருவாரா? ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘‘ஜம்மு காஷ்மீரில் இப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக பாஜ தலைவர்கள் கூறிக் கொள்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் ஏன் ஜம்முவிலிருந்து காஷ்மீர் நோக்கி யாத்திரை செல்லக் கூடாது? அமித் ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை நடந்து வந்து காட்டலாமே’’ என சவால் விடுத்தார்.

Related Stories: