கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையை மூடும் போது விபரீதம்; கேட் சரிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி: மேலாளர், செக்யூரிட்டி கைது

சென்னை: கீழ் ப்பாக்கத்தில் துணிக்கடையை மூடும் போது, எதிர்பாராத விதமாக கேட் சரிந்து விழுந்ததில் அருகில் நின்று இருந்த 5 வயது சிறுமி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக துணிக்கடையின் மேலாளர், செக்யூரிட்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நம் ஆழ்வார்பேட்டை சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், கீழ்ப்பாக்கம் ஹர்லிக்ஸ் சாலையில் உள்ள பிஎம்எஸ் கட்டிடத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக சங்கர் வேலை முடிந்ததும் அவரது மனைவி வாணி வந்து அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு வாணி தனது 5 வயது குழந்தை ஹரினியுடன் வந்து பிஎம்எஸ் கட்டிடத்தின் கேட் அருகே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது கட்டிடத்தின் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் சம்பத்(65) கேட்டை சாத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேட் சரிந்து, கட்டிடத்தின் வெளியே தனது தந்தையை அழைத்து செல்ல ஆவலுடன் காத்திருந்த 5 வயது சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த சிறுமியின் தாய் வாணி மற்றும் அருகில் இருந்தவர்கள் கேட்டை தூக்கி சிறுமியை மீட்டனர். அப்போது தனது மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை பார்த்த அவரது தாய் மற்றும் தந்தை சங்கர் ஆகியோர் கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்தில் மீட்கப்பட்ட சிறுமி சுயநினைவு இன்றி இருந்தார். உடனே சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் ஐபிசி 279, 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கட்டிடத்தின் செக்யூரிட்டி சம்பத் மற்றும் துணிக்கடையின் மேலாளர் சீனிவாசன் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கீழ்ப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: