ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின்தங்கிய அதானி: இது வெறும் ஆரம்பம்தான்

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் ஓரிரு நாளில் ரூ.2.40 லட்சம் கோடி சொத்துக்களை இழந்த கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 7ம் இடத்திற்கு பின்தங்கி உள்ளார். அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த 2 ஆண்டாக நடத்திய ஆய்வில், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடிகளை செய்துள்ளதாகவும், அதன் மூலம் ரூ.17.80 லட்சம் கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளதாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது.

கடந்த 24ம் தேதி வெளியான இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அவரது சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி தற்போது 7ம் இடத்திற்கு பின்தங்கி உள்ளார். ப்ளூம்பர்க்கின் உலக பணக்காரர்கள் குறியீட்டின் நேற்றைய அப்டேட்டில், அதானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.60 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இதற்கு முன் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஓரிரு நாளில் ரூ.2.40 லட்சம் கோடி வரையிலும் அதானி நஷ்மடைந்துள்ளார்.

இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சி அடையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுதவிர, அதானி குழுமம் தனது புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டது. இதற்கான பங்கு வெளியீடு நேற்று முன்தினம் தொடங்கியது. 4 நாளில் புதிய பங்குகள் விற்பனை மூலமாக ரூ.20,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்ட நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையால் யாரும் அதானி பங்குகளை வாங்க முன்வரவில்லை. இதனால் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், புதிய பங்குகளை விலையை குறைக்கவும், விற்பனை கால அளவை நீட்டிக்கவும் அதானி குழுமம் யோசித்து வருகிறது.

* பாஜ அரசு மவுனம் கலைக்க வேண்டும்

உபி முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த 2 நாட்களாக அதானி குழுமத்தை பற்றிய ஹிண்டன் நிறுவனத்தின் எதிர்மறையான அறிக்கை குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பணமும் சம்மந்தப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய பாஜ அரசு தனது மவுனத்தை கலைக்க வேண்டும். வரும் 31ல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை அரசு இரு அவையிலும் தாக்கல் செய்ய வேண்டும். அதானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் சரிகிறது. எனவே அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள அரசு நிறுவனங்களின் நிலை குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

* ரூ.78 ஆயிரம் கோடி இழப்பு: ஒன்றிய நிதி அமைச்சர் மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.77 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.53 ஆயிரம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல, எஸ்பிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.54,618 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வகையில்ரூ.78,118 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும், அதானி குழுமத்தில் எல்ஐசி மேலும் ரூ.300 கோடியும், எஸ்பிஐ ரூ.225 கோடியும் முதலீடு செய்திருப்பது ஏன்? இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி, சிபிஐ, செபி, அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய நிதி அமைச்சர் ஆகியோர் வாய் மூடி மவுனம் காப்பது ஏன்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: