2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்க காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும்: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

புதுடெல்லி: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள எந்த ஒரு எதிர்க்கட்சி கூட்டணிக்கும் மையப் புள்ளியாக காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்குப் பிறகு, 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் ஆணிவேராக காங்கிரஸ் நிச்சயம் இருக்கும் என்றே நம்புகிறேன். ஏனெனில், பாஜவைத் தவிர நாங்கள் மட்டும் தேசிய அளவிலான கட்சியாக உள்ளோம். நாங்கள் பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கிராமத்திலும், பட்டி தொட்டியிலும், நகரத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள். நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் காங்கிரஸ் குடும்பங்களை பார்க்கலாம்.

நாடு முழுவதும் முன்னிலையில் இருக்கும் ஒரே அரசியல் சக்தி காங்கிரஸ் தான். ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை வைத்தோ, வாக்கு சதவீதத்தை வைத்தோ செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம். காங்கிரசின் சித்தாந்தம் அனைவருக்கும் பொதுவானது. எனவே நாங்கள் தான் ஆதாரம். பாஜவை எதிர்க்கும் எந்த ஒரு எதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் தான் மையமாக இருக்க வேண்டும். இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரசுக்கு புது தெம்பை தந்துள்ளது. யாத்திரைக்கு முந்தைய நிலையை விட இப்போதைய காங்கிரஸ் நிச்சயம் மாறுபட்டது என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* 2029ல் தனித்து போட்டி?

ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘2029ம் ஆண்டில் அனைத்து மாநிலத்திலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் அளவுக்கு தயாராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் இந்த நிலைப்பாடு கட்சிக்கு சாதகமாக இருக்காது என்னும் யதார்த்தத்தையும் நான் புரிந்து கொண்டுள்ளேன்’’ என்றார்.

Related Stories: