வரும் மார்ச் மாதத்திற்குள் மதுரை கோட்டத்தில் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கல்: 9 மாதங்களில் ரூ.800 கோடி வருவாய் ஈட்டி சாதனை

நெல்லை: தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித் தரும் மதுரை கோட்டம் கடந்த 9 மாதங்களில் ரூ.800 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கல் என்ற இலக்கை மதுரை ேகாட்டம் எட்ட உள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில் மதுரை கோட்டம் வருவாய் அள்ளித்தரும் கோட்டமாகும். இக்கோட்டத்தில் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், செந்தூர் மற்றும் பொதிகை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருவாயை ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் கொரோனா காலத்திற்கு பின்னர் இவ்வாண்டு வருவாயை ஈட்டுவதில் மதுரை கோட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.

மதுரை ரயில்வே கோட்டம் கடந்த 9 மாதங்களில் ரூ.800 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டு வருமானமான ரூ.510.35 கோடியை காட்டிலும் 57 சதவீதம் அதிகமாகும். ரயில்வே வாரியம் நிர்ணயித்த வருமான இலக்கான ரூ.666.83 கோடியை காட்டிலும் 20 சதவீதம் அதிகம் லாபம் ஈட்டி சாதித்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 25 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டில் இதே காலத்தில் 9.2 மில்லியன் பயணிகள் மட்டுமே பயணித்திருந்தனர். ரயில் பயண சீட்டு வருமானம் ரூ. 502.05 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு வருமானமான ரூ.280.80 கோடியை காட்டிலும் 79 சதவீதம் அதிகமாகும். சரக்கு போக்குவரத்தில் 2.20 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கான 1.67 மில்லியன் டன்னை காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிகபட்ச அளவாக 2.2 லட்சம் டன் சரக்குகள், சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் எப்போதும் இல்லாத அதிகப்பட்ச வருமானமாக ரூ.19.99 கோடி ஈட்டப்பட்டுள்ளது. மின்னணு ஏல முறை வாயிலாக விளம்பரம், வாகன காப்பகம், கழிப்பறை மேலாண்மை, உடமைகள் காப்பகம், பார்சல் ரயில் பெட்டி குத்தகை, குளிர்சாதன ஓய்வறை ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.33.97 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் தவிர இதர வருமானம் ஈட்ட ரயில் நிலையங்களில் பூங்கொத்து விற்பனையகம், கதர் கிராம தொழில் பொருட்கள் விற்பனை ஆகியவற்றிற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் 90 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கல் என்ற இலக்கை மதுரை ேகாட்டம் எட்ட உள்ளது.

Related Stories: