பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: சென்னை பள்ளிகள் சாம்பியன்; அமைச்சர் அன்பில் கோப்பைகளை வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான  கைப்பந்துப் போட்டி சென்னை பெரியமேடு நேரு, எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கங்களில் நடந்து வருகிறது. சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் நடத்தும் இந்தப் போட்டியில் சுமார் 100 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1200  மாணவர், மாணவியர் பிரிவுகளில் பங்கேற்றனர். எழும்பூர் அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான 3வது இடத்துக்கான ஆட்டங்களும், இறுதி ஆட்டங்களும் நேற்று நடந்தன. மாணவர்களுக்கான பிரிவில்  திருவாரூர் வேலுடையார் பள்ளி  25-17, 25-22 என்ற நேர் செட்களில்  சென்னை டான் பாஸ்கோ பள்ளியை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது.

மாணவிகளுக்கான பிரிவில் ஈரோடு குமுதா மேனிலைப் பள்ளி 25-22, 25-16 என நேர் செட்களில் சென்னை எல்எஸ்எஸ் மேனிலைப் பள்ளியை வென்று 3வது இடத்தை கைப்பற்றியது.

தொடர்ந்து நடந்த  மாணவிகளுக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை ரோல்டன் பெண்கள் மேனிலைப்பள்ளி  25-18,  25-16 என நேர் செட்களில் மயிலாடுதுறை கலைமகள் மேனிலைப் பள்ளி வீழ்த்தி  சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல் மாணவர்களுக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை செயின்ட் பீட்டர்  பள்ளி 23-25, 26-24, 25-17 என்ற செட்களில்   சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியை போராடி வென்று சாம்பியன் ஆனது.

வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுக் கோப்பைகளை வழங்கி பேசும் போது, ‘ குறுகிய காலத்தில் இப்படி சிறப்பான ஏற்பாடுகளை செய்வது சாதாரண விஷயமில்லை. இந்தப் போட்டியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.  இளைஞர்களை நிர்வாகிகளாக கொண்டிருக்கும் இந்த சங்கம் கட்டாயம் அதனை சாதிக்கும். கூடவே அதற்கு தேவையான உதவிகளை செய்ய முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் எப்போதும் தயாராக உள்ளனர்’ என்றார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ஐ.பரந்தாமன் எம்எல்ஏ,  எஸ்என்ஜே குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் எஸ்.என்.ஜே முருகன்,  ரோமா குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்  ஆர்.வி.எம்.ஏ.ராஜன்,  தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர், முன்னாள் டிஜிபி டபிள்யூ.ஐ.தேவாரம் ஆகியோர் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை  கைப்பந்து சங்கத்தின்  வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜுன்துரை, துணைத் தலைவர் பி.ஜெகதீசன், செயலாளர் சி.ஸ்ரீகேசவன், போட்டி இயக்குநர் ஏ.பழனியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

கல்லூரி அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெறும்.

Related Stories: