இரண்டுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய சென்னையில் 800 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி குற்றவாளிகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால் 2க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் ‘ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் நேற்று முன்தினம் ஒரு நாள் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் அடிதடி உள்ளிட்ட 2க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 800 ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களிடம் போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர்.

அந்த வகையில், கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டியது, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 85 ரவுடிகளிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடம் இனி குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று போலீசார் எழுதி வாங்கினர். 715 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் புதிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 ரவுடிகள், ஒரு தலைமறைவு குற்றவாளி என 7 ரவுடிகள் இந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர். மேலும், 16 ரவுடிகள் இனி எந்த குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.  இதுவரை மாநகர காவல் எல்லையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2,539 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.

Related Stories: