ஆஸ்கர் விருது இறுதிப்பட்டியலில் யானைகளின் ஆவணப்படம் தேர்வால் பெண் பாகன் மகிழ்ச்சி..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பொம்மி, ரகு என்ற யானைகளின் வளர்ப்புமுறை குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. விருதை வென்றால் தங்களது கிராமமே பெருமையடையம் என யானைகளை வளர்த்த பெண் பாகன் பெல்லி  தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு வன விலங்குகளுடன் வன பகுதியில் இருந்து வழிதவறி திரியும் யானைகளும் வளர்ப்பு முகாமில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.  

அவ்வாறு முகாமில் பாதுகாக்கப்படும் கட்டு யானைகள் உரிய பயிற்சிக்கு பிறகு கும்கி யானைகளாக மாற்றப்பட்டு பின்னர் அவை ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. அந்த வரிசையில் கிருஷ்ணகிரியில் தாயை பிரிந்து சுற்றி திரிந்த 11 மாதமே ஆன ரகு என்ற யானை முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டுவந்து வளர்க்கப்பட்டு வருகிறது. இதே போல் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தனியாக சுற்றி திரிந்த 5 மாதங்களே ஆன அம்முக்குட்டி என்ற பொம்மியும் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த இரண்டு யானை குட்டிகளையும் வளர்ப்பதற்காக கணவன் மனைவியான பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய இரு பாகன்களை பணியமர்த்தப்பட்டு. இருவரும் இந்த யானைகளை பராமரித்து வந்தனர். இருவருடைய சொல்பேச்சு கேட்டு வளர்ந்த பொம்மி மற்றும் ரகு யானைகள் குறித்து கடந்த 2019ம் ஆண்டு ஊட்டியை சேர்ந்த பெண் இயக்குநர் இயக்கிய தி எலிபாண்ட் விஸ்பேர்ஸ் என்ற ஆவணப்படம் வெளியானது. பரவலாக வரவேற்பை பெற்ற இந்த ஆவணப்படம் தற்போது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.

தங்களது குடும்ப உறவுகளை போல வளர்ந்த யானைகளை குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு சென்றிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாகன் பெல்லி தெரிவித்துள்ளார். முதுமலை காப்பக சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு கும்கி யானை ஒரே பாகனிடம் வளரக்கூடாது என்பதால் பொம்மியும், ரகுவும் வேறு பாகனிடம் ஒப்படைக்கபட்டு பராமரிக்கப்படுகிறது. அதே போல் பாகனான பொம்மனிடம் தற்போது கிருஷ்ணா என்ற கும்கி யானை ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: