பிபிசி ஆவணப்படம் திரையிடல் விவகாரம்; ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: காவல் நிலையம் முற்றுகையால் பதற்றம்

புதுடெல்லி: டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டதால், மாணவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் கலவரம் குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படம் தலைநகர் டெல்லியின் ஜே.என்.யூ பல்கலை வளாகத்தில் திரையிடப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையை மீறி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதால், அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது, சத்ரா பரிஷத் அமைப்பினர் கற்களை வீசினர். இதனால் மாணவர்கள்  அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வசந்த் குஞ்ச் காவல் நிலையம் முன்பு கூடிய மாணவர்கள், குறிப்பிட்ட அமைப்பினருக்கு எதிராக காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 25 பேர் மீது மாணவர் அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் நடத்திய மாணவர்கள் கலைந்து சென்றனர். பல்கலைக்கழகத்தின் சார்பில், மீண்டும் அந்த ஆவணப்படத்தை திரையிடாத வகையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அங்கு ஜாமர் கருவியும் பொருத்தப்பட்டதால், இணையதள சேவையும் பாதிக்கப்பட்டது. இதையும் மீறி, அங்கு கூடியிருந்த மாணவர்கள் தங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஆவணப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: