பாளை அருகே சிவந்திபட்டி அண்ணா தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றி பொதுப்பாதை-பஞ்சாயத்து தலைவர் அதிரடி

கேடிசி நகர் : பாளை அருகே சிவந்திபட்டி அண்ணா தெருவில் டிடிடிஏ நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனை பொதுப்பாதைக்கு பயன்படுத்த வேண்டும் என்று சிவந்திபட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.

 இதையடுத்து மாவட்ட கலெக்டர், இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் இந்த இடம் நத்தம் புறம்போக்கு என்பதும், இதை பஞ்சாயத்து தீர்மானம் மூலம் பாதையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆர்டிஓ உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த இடத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் முட்செடிகளை அகற்றி பொதுப்பாதைக்கு பயன்படுத்துவதற்கு சிவந்திபட்டி ஊராட்சி தலைவி பெருமாத்தாள், பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், பாளை யூனியன் சேர்மனுமான தங்கபாண்டியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள். பாதையை உருவாக்க ஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர். இதற்கு அந்த தனிநபர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாளை துணைதாசில்தார் கிரேஸி, வருவாய் ஆய்வாளர் கணபதியம்மாள், விஏஓ அனந்தராமகிருஷ்ணன் மற்றும் சிவந்திபட்டி எஸ்ஐ மாரியப்பன் ஆகியோர் அங்கு வந்தனர். அந்து இடம் நத்தம் புறம்போக்கு என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்குள்ள ஆக்கிரமிப்பு மற்றும் முட்செடிகள் அகற்றப்பட்டு, பொதுப்பாதைக்கு திறந்து விடப்பட்டது.

 இதுகுறித்து பெருமாத்தாள் கூறுகையில், ‘‘இங்குள்ள பள்ளி மாணவர்களின் வசதிக்காக இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும். இந்தப் பாதையை பொது பாதையாக உருவாக்குவதால், இங்குள்ள விவசாயிகள் வயல்களுக்கு செல்வதற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.’’ என்றார்.

Related Stories: