செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கிய ரிசார்ட், எஸ்டேட்களை மூடவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு

மதுரை: செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட், எஸ்டேட்களை மூடவேண்டும். குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த வினோத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தென்காசி மாவட்டம், குற்றாலம், கன்னியாகுமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், சுற்றுலாத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் மற்றும் தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேரைக் கொண்ட குழு  உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நீர்வீழ்ச்சிகளின் வழித்தடத்தை மாற்றியவர்கள், அனுமதியற்ற ரிசார்ட்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்ைக  எடுப்பர் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாது: சுற்றுலாத்துறை இயக்குநர் தலைமையில் அரசுத் தரப்பில் அமைக்கப்பட்ட குழுவினர், மலைப்பகுதியில் இயற்கையாக உருவான அருவிகளின் இயற்கை நீர்வழித்தடத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்கள் மற்றும் தனியார் எஸ்ேடட்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது பணியை மேற்கொள்ளாமல் சட்டவிரோத நடவடிக்கைக்கு துணை போன அரசு ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குத்தகை நிலங்களில் செயற்கையாக தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ரத்து செய்யப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: