ஹிஜாப் தொடர்பான வழக்குகள் விரைவில் 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: இரு மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில், ஹிஜாப் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப்  அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, மாணவிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மத மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை மட்டும் அணிந்து வர வேண்டும் என மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம்  கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது செல்லும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து   தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தது.  

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா”ஹிஜாப் தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் அமர்வில் நியமனம் செய்து விரைந்து விசாரிக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். . மேலும் ஹிஜாப் தொடர்பான வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் இஸ்லாமிய மாணவிகளின் நிலைப்பாடு என்பது பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.

அதனால் இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஹிஜாப் வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமனம் செய்யப்பட்டு வழக்கு விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: