தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?-விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்

திருவில்லிபுத்தூர் : வத்திராயிருப்பு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:வத்திராயிருப்பு வட்டாரத்தில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னந்தோப்புகள் உள்ளன. இதில், உள்ள தென்னை மரங்களில் ஆங்காங்கே காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்படுகிறது. காண்டமிருக வண்டு மரத்தின் குருத்து பகுதியில் துளையிட்டு தின்பதால், வெளிவரும் இலைகள் கத்தரியால் வெட்டியது போல வி வடிவத்தில் காணப்படும். சாண உரக்குழிகள், அங்கக கழிவு குழிகளில், அதன் முட்டையினை இடும்.

இவைகள் 12 மாதங்கள் வாழும். புழுக்களின் வளர்ச்சி 6 மாதங்களிலிருந்து 8 மாதங்களாக இருக்கும், புழுக்கள் ஆரஞ்சு சுளை போல இருக்கும். இவற்றினை கட்டுப்படுத்த வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஹெக்டர் ஒன்றுக்கு காண்டாமிருக வண்டிற்கான இனப்பொறி 50 சதவீத மானியத்திலும், புழுக்களைக் கட்டுப்படுத்த மெட்டாரைசியம் 4 கிகி 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பஞ்சாயத்துக்களான மகாராஜபுரம், மாத்தூர், கோட்டையூர், அயன்கரிசல்குளம், காடனேரி, அக்கனாபுரம், நத்தம்பட்டி, கீழக்கோபாலபுரம் மற்றும் கல்யாணிபுரம், பஞ்சாயத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, இத்திட்டம் தற்பொழுது செயல்படுத்தபட்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: