வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவம் பங்கேற்பு: சிறப்பு விருந்தினராக அதிபர் சிசி வருகை

புதுடெல்லி: வரலாற்றில் முதல் முறையாக இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் சிசியும், குடியரசு தின அணிவகுப்பில் அந்நாட்டு ராணுவமும் பங்கேற்க இருப்பதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. வடஆப்ரிக்க நாடான எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் 24ம் தேதி டெல்லி வருகிறார். இந்த பயணம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எகிப்து அதிபர் சிசி, குடியரசு தின விழாவுக்கான சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடியால் அழைக்கப்பட்டுள்ளார்.

3 நாள் பயணமாக டெல்லி வரும் அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும், எகிப்து நாட்டு ராணுவ குழுவும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. அதிபர் சிசி தனது 2ம் நாள் பயணத்தில் வரும் 25ம் தேதி பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* இரு நாட்டு ராணுவம் முதல் கூட்டு பயிற்சி

இந்தியா, எகிப்து ராணுவத்தின் சிறப்பு படைகள் முதல் முறையாக ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் கூட்டு பயிற்சியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன. கடந்த 14ம் தேதி தொடங்கிய ‘எக்ஸர்சைஸ் சைக்ளோன்-1’ என்ற இந்த போர் ஒத்திகை 14 நாட்கள் நடக்கிறது. இதில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, கண்காணிப்பு, இலக்கை குறிவைத்து தகர்த்தல், போர் உக்திகள், நவீன ஆயுதங்களை கையாளுதல் போன்ற பல்வேறு விஷயங்களில் இருதரப்பு ராணுவமும் தொழில்முறை உத்திகளை பகிர்ந்து கொள்கின்றன.

Related Stories: